×

வண்ணாங்குப்பம் ஊராட்சியில் 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி: போராட்டம் நடத்த மக்கள் முடிவு

ஊத்துக்கோட்டை, பிப். 12:
பெரியபாளையம் அருகே சின்ன வண்ணாங்குப்பம் கிராமத்தில் 7 ஆண்டுகளாக தார் சாலை அமைக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதானல், அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் வண்ணாங்குப்பம் ஊராட்சியில் பெரிய வண்ணாங்குப்பம், சின்ன வண்ணாங்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு  விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 4000க்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு வேலை சம்மந்தமாகவும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூக்களை எடுத்துச்செல்லவும்  ஒன்றிய சாலையை பயன்படுத்துகின்றனர்.

இந்த ஒன்றிய சாலை கடந்த 7 வருடத்துக்கு முன்பு கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமானது. இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களில் விழுந்து காயமடைந்தனர். அவசர சிகிச்சை பெறுவதற்கான நோயாளிகளை வாகனங்களில் அழைத்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது.  மழை காலத்தில் இந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறிவிடும்.  இதனால் நடந்து செல்லகூடா முடியாமல் ஆனது. எனவே, சாலையை சீர்படுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், வண்ணாங்குப்பம்  ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

இதனால், ஆத்திரமடைந்த பெரிய வண்ணாங்குப்பம் பகுதி மக்களும், சின்ன வண்ணாங்குப்பம் பகுதி மக்களும் சாலை மறியல் மற்றும் சாலையில் உருளும் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதன்பிறகு கடந்த வருடம்   சாலை பணிகளை தொடங்கி ஒரு சில இடங்களில் சாலை போட்டுள்ளனர். சின்ன வண்ணாங்குப்பம் பகுதியில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில்  பழைய சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.  பின்னர், ஜல்லி கற்கள்  ஆங்காங்கே கொட்டப்பட்டது.

ஆனால், இது வரை சாலை அமைக்கவில்லை. தோண்டப்பட்ட மண் சாலையில் மழை காலத்தில்  மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதி வழியாக மக்கள்  வேலை சம்மந்தமாகவும் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். காற்றில் பறக்கும் மண் துகள் படிவதால் வீட்டில் இருக்குளம் பொருட்கள் சேதமாகிறது. சிறுவர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சின்ன வண்ணாங்குப்பம் பகுதியில் சாலை போடுவதற்காக கடந்த வருடம்   ஜல்லி கற்கள் கொட்டினார்கள். ஆனால், இதுவரை சாலை போடவில்லை.  பிடிஒ அலுவலகத்தில் கூறினால்,  ஒப்பந்தகாரரிடம் கூறி உடனே சாலைப்பணி தொடங்க ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர சாலைப்பணி தொடங்க வில்லை. எனவே, சாலைப்பணியை விரைவில் தொடங்கி முடிக்காவிட்டால் அதிகாரிகளின் கவனத்தை திருப்ப மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags :
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...